கொல்லம் எக்ஸ்பிரஸ் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி பெண் மரணம். உறவினர்கள் அபாய சங்கிலியை இழுத்தும் ரயில் நிக்க வில்லை என்று வேதனை.
சென்னை சங்கரன்கோவில் அருகே உள்ள மேல நீலித்த நல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். அவரின் மனைவி கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவரது கணவர் சுரேஷ்குமார் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 21 வயதான கஸ்தூரி, அவரது 11 உறவினர்களுடன் சங்கரன்கோவில் திருவிழாவிற்கு கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்துள்ளார்.
அப்பொழுது தனக்கு வாந்தி வருவது போல் இருப்பதாக கூறிவிட்டு ரயிலின் படியில் அமர்ந்து வந்துள்ளார் அவர். ரயில் விருத்தாச்சலம் தாண்டி சென்று கொண்டிருந்த பொழுது படியில் அமர்ந்திருந்த கஸ்தூரி தவறி கீழே விழுந்துள்ளார். அதனைக் கண்ட உறவினர்கள் அதிர்ந்து போய் தாங்கள் வந்த எஸ் 9 பெட்டியின் அபாய சங்கிலியை இழுத்துள்ளனர். சங்கிலியை இழுத்தும் ரயில் நிக்காததால் அடுத்த, பெட்டிகளான எஸ்8 பெட்டிகளில் உள்ள அபாய சங்கிலிகளையும் இழுத்துள்ளனர். அப்பொழுதும் ரயில் நிக்காததால், எஸ் 10 பெட்டியின் அபாய சங்கிலி இழுத்துள்ளனர். அப்படியும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் ஐந்து கிலோமீட்டர் அப்பால் சென்று நின்றுள்ளது. பதறிப்போன உறவினர்கள் அவர் கீழே விழுந்த இடத்திற்கு வருவதற்குள் 7 மாத கர்ப்பிணி பெண்ணாகிய அவர் இறந்து விட்டார்.
அதனை எடுத்து உறவினர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். சங்கிலி இழுத்தும் ரயில் நிக்காததால் அவருக்கு உடனடியாக உதவ முடியவில்லை என்று உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனை எடுத்து அந்த ரயில் நிர்வாகம் ரயில் பெட்டியின் பாதுகாப்பு அம்சத்தை உடனடியாக பரிசோதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்ப்பிணி பெண்ணான இவரின் மரணம் அந்த ஊர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருக்கு வரும் ஐந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வளைகாப்பு செய்ய உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தது வருத்தத்தை அளிக்கிறது.
அ.காவியன்
செய்தியாளர்