திருச்சியில் போயர் சமுதாய நலச்சங்கம் முதலாம் ஆண்டு விழா திருச்சி மாவட்ட தலைவர் மாநில ஒப்பந்ததாரர் ரங்கசாமி தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு..
போயர் சமுதாயம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதால், அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் முன்னேற்றத்திற்காகத் தனி நல வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து சமுதாயத் தலைவர்கள் முதலமைச்சரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும். காமராஜர் நகர் பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களுக்கு, தகுதியான இடமாக இருந்தால் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சமுதாய மக்கள் அரசு ஒப்பந்தப் பணிகளில் (Tenders) ஈடுபடத் தேவையான தகுதிகளைப் பெற்று பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தினார். அவர்களுக்குத் தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
சட்டமன்றத் தேர்தலில் சமுதாய மக்களுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து, வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் வாய்ப்பு வழங்கக் கோரிக்கை வைக்கப்படும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, குறிப்பாகப் பெரிய கட்டிடங்கள் கட்டுவது, சாலைகள் அமைப்பது மற்றும் விவசாயப் பணிகளில் போயர் சமுதாய மக்களின் உழைப்பு மிக முக்கியமானது என்று அமைச்சர் நேரு பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் அன்பழகன், முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட பொருளாளர் துரைராஜ், மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் உள்ளிட்ட ஏராளமான போயர் சமுதாய மக்கள் கலந்து கொண்டனர்.
