புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள துவார் மற்றும் மழையூர் அருகே உள்ள வெள்ளாளவிடுதி ஆகிய இரு வேறு இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் துவார் வெள்ளாளவிடுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் விளைவித்த நெல்மணிகளை கொள்முதலுக்கு கொடுப்பது வழக்கம்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நெல் மணிகளை கொள்முதல் நிலையத்தின் முன்பு குவியல் குவியலாக விவசாயிகள் கொட்டி வைத்து கொள்முதலுக்காக காத்திருப்பதாகவும். ஆனால் நெல் கொள்முதல் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 300லிருந்து 400 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் நெல்மணிகள் குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையினால் நெல்மணிகள் நனைந்து கருப்பு நிறமாக மாறி சேதமடைந்து முளைத்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் பாடுபட்டு விளைவித்த சுமார் 5000 மூட்டை நெல்மணிகள் சேதம் அடைந்து உள்ளதாக கவலை தெரிவிக்கும்.

விவசாயிகள்
ஒரு நாளைக்கு ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மணிகளை உலர்த்த உலர் களம் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர். பழனிவேல்

