அயோத்திக்குப்பம் வீரமணி, சந்தனக் கடத்தல் வீரப்பன் என்கவுன்ட்டர் உள்ளிட்ட பலரின் என்கவுன்ட்டர் ஆபரேஷன்களில் வெள்ளத்துரை முக்கிய பங்கு வகித்துள்ளார். தனது 25 வருட சர்வீஸில் 12 என்கவுன்ட்டர்கள் நடத்தியவர் வெள்ளத்துரை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தின்போது ஐ.ஜி. விஜயகுமார், சந்தன கடத்தல் வீரப்பனை ஒடுக்கப் பணியில் அமர்த்தப்பட்டவர். அவரது குழுவில் இருந்தவர் தூத்துக்குடி மாவட்டத்தின் வல்லநாட்டைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை. வீரப்பனைச் சுட்டுக் கொன்றதால் இரட்டைப் பதவி உயர்வு பெற்று கூடுதல் எஸ்.பி.யானவர் வெள்ளத்துரை.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் வழக்கில் கைதான ரவுடி, மற்றும் மதுரையில் எஸ்.ஐ.க்களைக் குத்திய ரவுடிகளை என்கவுன்ட்டர் செய்ததில் ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ எனப் பெயர் பெற்றவர் வெள்ளத்துரை இந்தநிலையில் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் வெள்ளைத்துரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
2013ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் திருப்பாச்சேத்தியில் ராமு (26) என்கிற குமார் என்ற கொக்கி குமார் என்பவர், போலீஸ் காவலில் இருந்த போது மரணமடந்த வழக்கில் வெள்ளதுரைக்கு தொடர்பு இருப்பதாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் வெள்ளத்துரை மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது திருவண்ணாமலை குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பியாக பணியாற்றி வந்த வெள்ளத்துரை கடந்த 31ம் தேதியோடு ஓய்வு பெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.