திருவாரூர் மாவட்டம், இலவங்கார்குடி, ராஜகுரு நகர் பகுதியில் வசித்து வருபவர் நாகநாதன் பிரபாவதி தம்பதியினர். நாகநாதன் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் பிரபாவதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் மறுநாள் காலை பால் எடுக்க அவர் வெளியே வராததால் அவர் வீட்டின் அக்கம் பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது அவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை எடுத்து அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் தகவல் தெரிவித்தனர்.
அடுத்த 12 மணி நேரத்தில் கொலையாளி கைது :
போலீசார் இதற்காக 4 தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தனர். அந்த விசாரணையில் கொலை செய்தது இளவங்கார்குடி, கீழ தெருவை சேர்ந்த சந்தோஷ் (20 வயது) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சந்தோஷ் அந்தப் பகுதியில் கேபிள் வேலை செய்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று காலை பிரபாவதியின் வீட்டிற்கு கேபிள் கனெக்சன் கொடுப்பதற்காக வீட்டிற்கு வந்த சந்தோஷ் அவர் தனியாக இருப்பதை கண்டு அவர் நகைகளை கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி அன்று இரவு அந்த வீட்டிற்கு சென்ற சந்தோஷ் சமையலறையில் இருந்த பிரபாவதி நோக்கி சென்றுள்ளார். பிரபாவதி அவரை வெளியே போக சொன்ன நிலையில், போர்வையால் அவர் முகத்தை மூடி கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து விட்டு அவருடைய தாலி சங்கிலி, மற்ற தங்க நகைகள், தோடு, கொலுசு மற்றும் அவருடைய செல்போனையும் திருடி சென்றுள்ளார். அவர் திருடி சென்ற செல்போனில் சிம் கார்டை மாற்றி உபயோகித்த பொழுது அந்த செல்போனின் IMEI எண் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். அதன்பின் நடைபெற்ற விசாரணையில் சந்தோஷ் குற்றத்தை ஒப்புக்கொண்டார். குற்றம் நடைபெற்ற 12 மணி நேரத்தில் குற்றவாளி கண்டறிந்ததற்காக அந்த காவலர்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டியுள்ளார்..
செய்தியாளர்
அ.காவியன்