திருச்சி மாநகர காவல்துறை சார்பில், குற்றத் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் மொத்தம் 17 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், குற்றச் சம்பவங்கள் மற்றும் உடல் ரீதியான குற்றங்கள்அதிகளவில் நடைபெறும் பகுதிகளாக அறியப்பட்ட பகுதிகளில், மாநகர காவல் ஆணையர் ந. காமினி வழிகாட்டுதலின் பேரில் பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கலந்தாய்வு கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாநகரத்தில் கண்டோன்மெண்ட் காவல் சரகத்தில் 4 இடங்களிலும், ஸ்ரீரங்கம் சரகத்தில் 4, தில்லை நகர் சரகத்தில் 3, பொன்மலை, கே.கே நகர், காந்திமார்க்கெட் ஆகிய சரகங்களில் தலா 2 இடங்கள் என மொத்தம் 17 இடங்களில் இக்கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெற்றன.
இவற்றில் காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் தலைமையில், குற்றம் மற்றும் உடல் ரீதியான குற்றங்கள் தடுப்பு, காவல் செயலி, சைபர் கிரைம் குறித்து ஆலோசிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கள் பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்கள், நபர்கள் குறித்த தகவல்களை உடனடியாக காவல்துறைகக்கு தெரிவிக்கவும், கடைகள், அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகளில் குற்றங்களை தடுக்க (சிசிடிவி) கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தவும், இரவுக்காவலாளி களை பணியில் அமர்த்தவும் அறிவுறுத்தப்பட்டது. திருச்சி மாநகரில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் காவல்துறையுடன் இணைந்து செயல்படவேண்டும் என, தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ்அப் எண்கள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை மாநகர காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது