காவி நிறமாக்கப்பட்டதா டிடி நியூஸ் சேனல் விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சிகள். மத்தியில் பெரும்பாலான விஷயங்கள் காவி நிறத்தில் இருக்கும் நிலையில் டிடியும் சிவப்பு நிறத்திலிருந்து, காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
1959 இல் தொடங்கப்பட்ட இந்திய அரசின் தூர்தர்ஷன் தலைமையிலான செய்தி சேனல் டிடி நியூசின் புதிய லோகோ வெளியாகி விவாத பொருளாகியுள்ளது. தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சியின் தலையீடு இருக்குமோ என எதிர்க் கட்சிகள் வசைபாடி கொண்டிருக்கின்றன.
லோகோவை மாற்றிய 48 மணி நேரத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது டிடி நியூஸ் சேனல். டிடி நியூஸ் இன் முந்தைய லோகோவான ரூபி சிவப்பு நிறத்திலிருந்து புதிய லோகோ ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த லோகோ நிறமாற்றத்திற்கு தலைமை அதிகாரி “அது காவி நிறமல்ல என்றும், ஆரஞ்சு நிறம் என்றும் இதை யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
முன்னாள் காங்கிரஸ் அமைச்சரவையில் தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறையை கவனித்த மனிஷ் திவாரி ” அரசு துறைகளை பாஜக அரசு கைப்பற்ற நினைப்பதாக கூறினார். பாரதிய ஜனதா கட்சியின் காவிமயமாக்க முயற்சி மற்றும் அரசு உடைமைகளை கைப்பற்றும் முயற்சியில் ஒரு அங்கமே இந்த லோகோ மாற்றம். இது தூர்தர்ஷனில் நடைபெற்று இருப்பது அந்த நியூஸ் சேனலின் நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையை குறைப்பதாக கூறினார்”.
இதற்கு பாஜக தரப்பில் 1959 இல் தூர்தர்ஷன் தொடங்கப்பட்ட பொழுது அது காவி நிறத்தில் தான் இருந்தது என்றும், மீண்டும் தன்னுடைய ஒரிஜினல் நிலைக்கு திரும்பி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த கருத்துக்கள் ஒருபுறம் இருக்க தூர்தர்ஷனின் தற்போதைய CEO எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை முற்றிலுமாக மறுத்துள்ளார். தூர்தர்ஷன் லோகோவை ஆரஞ்சு நிறத்தில் மாற்றியுள்ளோம் இது காவி நிறம் அல்ல என்றும் இந்த லோகோவை மட்டும் நாங்கள் மாற்றவில்லை தூர்தர்ஷனின் ஒட்டுமொத்தத்தையும் தரம் உயர்த்தியுள்ளோம் என்றும் இதற்கு கடந்த பல மாதங்களாகவே நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி லோகோ மாற்றம் இது ஒன்றும் புதிதல்ல என்றும் இதுவரை நீளம் மஞ்சள் சிகப்பு என்று பல வண்ணங்கள் மாற்றப்பட்டு இருப்பதாகவும் தூர்தர்ஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அ.காவியன்
செய்தியாளர்