சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல் தொழிலாளி லாக்கப்பில் வைத்து அடித்து கொல்லப்பட்ட துயர சம்பவத்தை கண்டித்து முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளில் 28 பேர் காவல்நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இதைவிட அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் இருக்க முடியாது. சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் லாக்கப் மரணம் நடந்த போது அப்போதைய எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், கனிமொழி மற்றும் தி.மு.க அமைச்சர்கள் வரிந்து கட்டிக் கொண்டு தங்களை மனித உரிமைக் காவலர்களாக கருதி கொண்டு போராட்ட நாடகங்களை ஓட்டுக்காக அரங்கேற்றினர். தற்போது அவர்களது 4 ஆண்டு ஆட்சியின் 28 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளது. விசாரணையின் போது கைதிகளுக்கு பயத்தில் மாரடைப்பு வருவது சகஜம் தான் என்று முதல்வர் ஸ்டாலின் பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே அமைந்துள்ள மடப்புரம் காளி கோயிலில் தற்காலிக காவலராக பணிபுரிந்த அஜித்குமார் என்ற 29 வயது வாலிபரை காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்று லாக்கப்பில் வைத்து கொடூரமாக தாக்கியதால் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது விசாரணைக்கு அழைத்துச் சென்ற கைதியை எப்.ஐ.ஆர் போடாமலே இரண்டு நாட்கள் அடித்து சித்திரவதை செய்து காவலர்கள் படுகொலை செய்துள்ளனர். தமிழகத்தில் கொலை, கொள்ளை, கூட்டுப் பாலியல் சம்பவங்கள், கள்ளச்சாராயம், கஞ்சா புழக்கம் கடை கோடி குக்கிராமங்கள் வரை தங்கு தடையின்றி கிடைக்கிறது. டாஸ்மாக் பார்கள் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் கள்ளசந்தையில் விற்பனை செய்யப் படுகிறது. தற்போதைய அரசின் நிர்வாக சீர்கேட்டால் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பணியில் இருந்த அனைத்து காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். உரிய நீதி விசாரணை நடத்தி தண்டனை பெற்று தர வேண்டும். உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி க்கு உடனடியாக மாற்ற வேண்டும். தேசிய மனித உரிமை ஆணையம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமான தமிழக அரசை மிக வன்மையாக கண்டிக்கிறேன்.