நாடு முழுவதும் பல்வேறு இன்னலான பணிகளுக்கிடையே வீரமரணம் அடைந்த 191 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் நினைவாக காவலர் வீரவணக்க நாள் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில் அக்டோபர் 21. ந்தேதி இன்று ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின்பு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் இரா.முத்தமிழ்செல்வன் ( தலைமை இடம்), காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் , இராம் சக்திவேல் (அரியலூர் உட்கோட்டம்) ரவிச்சந்திரன் (மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடம்) மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இதன் தொடர்ச்சியாக அரியலூர் மாவட்டத்தில் பணியின் போது உயிர் நீத்த 5 காவலர்களின் குடும்பத்தினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் சிவச்சந்திரன் குடும்பத்தினரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான ஆயுதப்படை காவலர்கள் அரசு மரியாதையுடன் 63 குண்டுகள் முழங்க வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள். காவல்துறையில் பணிபுரிந்து மறைந்த காவலர்களின் பணியையும், அர்ப்பணிப்பையும் நினைவு கூர்ந்து

அவர்களது குடும்பத்தினரிடம் எஸ்.பி சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பாக விருந்து உபசரிப்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்துகொண்டு வீரமரணமடைந்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள்.
எம்.எஸ்.மதுக்குமார்.

