கறம்பக்குடியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் இடமாற்றத்தை கண்டித்து வணிகர் சங்கத்தினர் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் கடை அடைப்பு சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் 25 ஆண்டு காலமாக தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது செயல்பட்டு வரும் தீயணைப்பு நிலையத்தை சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பல்லவராயன்பத்தை ஊராட்சியில் இடம் மாறுதல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கறம்பக்குடி நகர் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை தொடர்ந்து செயல்படுத்த வலியுறுத்தியும் கறம்பக்குடி வர்த்தக வணிகர் சங்கத்தினர் சார்பில் கடையடைப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது.

அப்பகுதியில் உள்ள 800-க்கும் மேற்பட்ட கடைகளை நேற்று ஒரு நாள் முழுவதும் அடைத்து வியாபாரிகள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும் இதனைத் தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சியினர், வர்த்தக வணிக சங்கத்தினர்,பொதுமக்கள் இணைந்து கந்தா்வக்கோட்டை எம்எல்ஏ சின்னத்துரை தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.இதனால் கறம்பக்குடி பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் தீயணைப்பு நிலையத்திற்கான இடத்தினை கறம்பக்குடி நகர் பகுதியில் ஆய்வு செய்வது எனவும்,அதுவரை பல்லவராயன்பத்தை ஊராட்சியில் நடைபெறும் கட்டுமான பணிகளை நிறுத்தி வைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.இதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.சாலை மறியல் போராட்டத்தினால் கறம்பக்குடி பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.