“நீ பாதி நான் பாதி”, “ஆனந்த ராகம்” உள்ளிட்ட பிரபல பாடல்களின் சொந்தக்காரியான உமா ரமணன் அவர்கள் காலமானார். சென்னை அடையாறில் தனது கணவனுடன் வசித்து வந்த அவர், சில மாதங்களாகவே உடல்நிலை குறைவால் அவஸ்தைப்பட்டு வந்துள்ள நிலையில், நேற்று மே 1 அவர் காலமானார். உமா ரமணன் அவர்களின் இறுதி சடங்கானது மே 2 மாலை, சென்னை, அடையாறில் உள்ள அவரது வீட்டில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உமா ரமணன் அவர்களின் இழப்பு தமிழ் இசை துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த உமா ரமணன்?
சிறுவயதிலிருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்ட இவர், எம்.ஏ. பட்டம் பெற்றுள்ளார். விமான ஏர் ஹோஸ்டர் ஆக வேண்டும் என்பதே என் ஆசை என்று பல நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
“மியூசியானோ” என்ற இசைக் குழுவை நடத்தி வந்த ரமணன் அவர்கள் 1972ல் தனது இசைக் குழுவில் பாடும் வாய்ப்பை உமாவிற்கு அளித்துள்ளார். இப்படியாக பல கச்சேரிகளில் இணைந்து பணியாற்றிய இவர்கள் இடையில் இருந்து நட்பு காதலாக மாறவே ரமணனின் காதல் புரபோசலை உமா ஏற்றுக்கொண்டு, திருமணமும் செய்து கொள்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து ரமணன் அவர்கள் இசையமைத்த “நீரோட்டம்” திரைப்படத்தில் பின்னணி பாடகையாக தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆகிறார் உமாரமணன். அதன் பிறகு அவருக்கு பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இப்படியாக அவர் இசை பயணம் இருக்க அப்பொழுது உச்சத்தில் இருந்த இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் குறிப்பாக நிழல்கள் திரைப்படத்தின் “பூங்கதவே தாழ் திற வா” என்ற பாடல் தனக்கு ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்ததாக அவரை நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து நீ பாதி நான் பாதி, ஆகாய வெண்ணிலாவே போன்று அடுத்தடுத்து ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி பாடகையாக வலம் வந்தார். மேலும் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் “கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு” எனும் பாடலையும் பாடியுள்ளார். இப்படிப்பட்ட ரம்ய குரலுக்கு சொந்தக்காரியான உமாரமணன் அவர்கள் இழப்பு தமிழ் இசை உலகில் பெரும் இழப்பு. பாடகி உமா ரமணன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
அ.காவியன்
செய்தியாளர்