தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதால் பெரம்பூரில் உள்ள வீட்டிற்கு போலீஸார் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளனர். மேலும் சந்தேகத்தின் பெயரில் ஒருவரை பிடித்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.
சென்னை பெரம்பூரில் உள்ள வேணுகோபால் சுவாமி தெருவில் புதிய வீட்டை கட்டி வந்த ஆம்ஸ்ட்ராங், அதே இடத்தில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை கடந்த ஜூலை 5ஆம் தேதி நடந்தது.
இந்த நிலையில் பெரம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவருடைய குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு சதீஷ் என்பவர் பெயரில் ஒரு மர்ம கடிதம் வந்துள்ளது. அதில் ஆம்ஸ்ட்ராங்கின் குழந்தையை கடத்தி, அவருடைய குடும்பத்தை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, குழந்தை இருக்கும் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சந்தேகத்தின் பெயரில் ஒருவரை பிடித்து செம்பியம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் வழக்கறிஞர் ஆவார். இவர்களுக்கு 2 வயது ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆம்ஸ்ட்ராங் மறைந்ததும் பொற்கொடிக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரும் தன்னை இனி திருமதி ஆம்ஸ்ட்ராங் என்றே அழைக்குமாறும், பொற்கொடி என்ற பெயரை பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடிகளில் திருவேங்கடம் என்பவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். மேலும், கட்சி பாகுபாடின்றி பலர் கைது செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழ்நிலையில்தான் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலைமிரட்டல் விடுத்துள்ள சம்பவம் தலைநகரில் பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.