அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆர்ஆறுமுகம், மாநிலத் துணைத் தலைவர் துரை. மதிவாணன் ஆகியோர் விடுக்கும் அறிக்கை. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள், பணியாளர்கள், அலுவலர்கள் பணி புரிந்து வருகின்றனர். தொழிலாளர்களின் அயராத உழைப்பினால் இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பகல் இரவு முழுவதும் 24 மணி நேர பயண சேவையை அனைத்து மாவட்டங்களுக்கும், கிராமங்களுக்கும் செய்து வருகிறது. டீசல் சேமிப்பு , வருவாய் பெருக்கம், பயணிகள் ஏற்றி இறக்குதல், அதிக கிலோமீட்டர் தூரம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விருதுகள் பெற்று வருகிறது. சட்டத்தில் 8 மணி நேர வேலை என்பது உள்ளது. ஆனால் தொழிலாளர்கள் பயணிகளின் பயணச் சேவையை கருத்தில் கொண்டு சுமார் 12 மணி நேரம் இரவு பகலாக, கண் விழித்து பயணிகளை ஏற்றி இறக்கியும், பயணச் சேவையை சிறப்பாக செய்தும், அரசின் மகளிர் இலவச பயண சேவை உள்ளிட்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி அரசுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். இவர்களுக்கு தீபாவளி பண்டிகை வருவதற்கு ஒரு மாதம் முன்னதாக போனஸ் வழங்கப்பட வேண்டும்.அதற்கு முன்னதாக அனைத்து தொழிற்சங்கங் களையும் அழைத்து பேசி சமூக தீர்வு காணப்பட வேண்டும். சமீபகாலமாக தொழிற்சங்கங்களை அழைத்து பேசுவதில்லை, அரசு தன்னிச்சையாக போனஸ் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. ஓட்டுநர்,நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல், கூடுதலான வேலைப்பளுவை சுமந்து கொண்டு பணிபுரிந்து வரும் தற்போதைய சூழ்நிலையில் தொழிலாளர்கள் உற்சாகத்துடன் பணிபுரியவும், விழா பண்டிகை காலங்களில், சிறப்பு இயக்கங்களில் பணி புரிய ஊக்கப்படுத்தும் வகையில், குறைந்த பட்ச சம்பளம் சட்டத்தின் படி கணக்கிட்டு 2023-2024 ஆம் ஆண்டுக்குரிய போனஸ் மற்றும் கருணைத் தொகை 25% வழங்க வேண்டும்.
போனஸ் சட்டத்தின் படி குறைந்தபட்சம் 30 நாட்கள் பணிபுரித்தால் அவர்களுக்கும் போனஸ், கருணைத்தகை வழங்க வேண்டும். போக்குவரத்து கழகங்களின் செயல்பாட்டிற்கு சொற்ப வருமானத்தில், உறுதுணையாக அடிமட்டத்தில் பணிபுரியும் பணிமனைகளில் பேருந்துகளை சுத்தம் செய்பவர்கள், உணவகப் பணியாளர்கள், பேருந்து நிலையங்களில் பயணிககளை கூவி அழைப்பவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த ஆண்டு போனஸ் அறிவித்து,திராவிட மாடல் அரசின் முன்னுதாரணமாக அமைய வேண்டும். கடந்த ஆண்டுகளில் போனஸ் நிலுவைத் தொகை உள்ளதையும் சேர்த்து இந்த ஆண்டு வழங்க வேண்டும். அதற்கு முன்னதாக தமிழ்நாடு அரசும், கழக நிர்வாகங்களும் ஏஐடியூசி உள்ளிட்ட அனைத்து அனைத்து பேரவை தொழிற்சகங்களையும் அழைத்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஏஐடியூசி வேண்டுகோள் விடுக்கிறது என்று பொதுச்செயலாளர் ஆர்.ஆறுமுகம், மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன் இருவரும் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். செய்தி:: துரை . மதிவாணன்.