கடந்த 2008ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பிறகு கடல்வழியாக பயங்கரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கப்பல் படை, கடலோர காவல் படை உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து சிறப்பு பயிற்சி நடத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு 21 கடல்சார் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் தேசிய அளவில் கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இரண்டு தினங்களுக்கு சிறப்பு பயிற்சியை பாதுகாப்புதுறையினர் மேற்கொள்கின்றனர்.
இதன் ஒருபகுதியாக அதிராம்பட்டினத்தில் பட்டுக்கோட்டை கடலோர காவல் குழும ஆய்வாளர் மஞ்சுளா தலைமையில் அதிராம்பட்டினம் கடற்கரை காவல்நிலைய உதவி ஆய்வாளர் பிச்சை வேம்பு, சேதுபாவாச்சத்திரம் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம் கடல் பரப்பப்பில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இரு படகுகளில் மீனவர்களின் ஒத்துழைப்புடன் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர். இந்த பயிற்சியின்போது பயங்கரவாதிகளின் பாணியின் நாட்டிற்குள் ஊடுருவ முயலும் நபர்களை பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்கள் சரியாக கண்டறிந்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.