ரயில்வேயில் அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க முடியும். 2007 முதல் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு உள்ளிட்ட சில காரணங்களால் 2019-ம் ஆண்டுக்குப் பிறகு தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில், ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் வரும் டிசம்பர் 4, 5, 6-ம் தேதிகளில் நடைபெற உள்ளது .இதன் காரணமாக ரயில்வேயின் 17 மண்டலங்களில் பணியாற்றும், 12.20 லட்சம் ஊழியர்களின் ஆதரவைப் பெற ரயில்வே தொழிற்சங்கங்களின் சம்மேளனங்கள் தயாராகி வருகின்றன. அதே போல திருச்சி ஆர்மரி கேட் மற்றும் திருச்சி ஜங்ஷன் வாயிலில் பெருந்திரளாக கூடியிருந்த தொழிலாளர்களிடையே வாக்கு சேகரிக்க எஸ் ஆர் எம் யூ சங்க பொதுச் செயலாளர் கண்ணையா இன்று திருச்சி வந்து ரயில்வே ஊழியர்களிடம் வாக்குகள் சேகரித்தார் . அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-மத்திய அரசு டிராக் மீட்டர்களை 40% வரை குறைக்க வேண்டும் என கூறுகின்றனர்.ரயில்வே துறையில் மத்திய அரசு இளைஞர்களுக்கு வேலை என கூறுகிறது ஆனால் இருப்பவர்களுக்கே வேலை பறிபோகும் நிலை உள்ளது. 4500 வந்தே பாரத் ரயில்கள் தனியாருக்கு கொடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.ஐ சி எப்-ல் உற்பத்தி செய்யும் போது ரயில்வே துறையினர் ரூ.98 கோடிக்கு செய்து கொண்டிருந்தனர். தற்போது தனியாரிடம் கொடுக்கப்பட்ட போது ரஷ்யா கம்பெனி ரூ.130 கோடியும் மற்ற நிறுவனங்கள் ரூ.200 கோடி அளவில் தயாரித்து கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இதனை தயாரிக்கும் நிறுவனமே 35 வருடங்களுக்கு பராமரிப்பையும் மேற்கொள்ள வேண்டும் இதனால் ரயில்வே ஊழியர்களின் பணி பாதிக்கப்படுகின்றது. இதனால் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனை எஸ் ஆர் எம் யூ எதிர்க்கிறது. இதனை மக்களிடம் எடுத்துச் சென்று அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம் என தெரிவித்தார். எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையாவின் வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளை எஸ்.ஆ.எம்.யூ. பொன்மலை மண்டல் தலைவர் வீரசேகரன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் .