`மே 2ல் பட்டாசு வெடிக்க கூடாது!’- அரசியல் கட்சிகளுக்கு எதிராக சாட்டையை எடுத்த நீதிபதிகள்

0

மே 2ம் தேதி வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடவும், பட்டாசுகள் வெடிக்கவும், ஊர்வலம் செல்லவும் கூடாது என அரசியல் கட்சியினருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விதிமுறைகளை கடைபிடிப்பதில் அரசியல் கட்சி தலைவர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசி, ரெம்டெசிவர், ஆக்சிஜன் பற்றாக்குறைகள் குறித்த செய்திகள் பத்திரிகைகளில் வெளியானது. இதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதேபோல கரூர் தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற உத்தரவிடக் கோரி போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, பிரசாரத்தின் போது கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம் தான், கொரோனா பரவலுக்கு காரணம். தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தலாம் என கடுமையாக விமர்சித்திருந்தது.

இந்தநிலையில், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துக்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், இந்த கருத்துக்களின் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும் எனக் கோரி தேர்தல் ஆணையத்தின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல, வாக்கு எண்ணிக்கையின் போது ஊடகத்தினரை அனுமதிக்க பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்தும், மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தேர்தல் ஆணையத்தின் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதிகள், மாநில அரசும், தேர்தல் ஆணையமும் பிறப்பித்துள்ள இந்த விதிகளை அரசியல் கட்சியினர், ஊடகத்தினர் கண்டிப்புடன் பின்பற்றி, ஒத்துழைப்பு வழங்க அறிவுறித்தினர். மேலும், வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடவும், பட்டாசுகள் வெடிக்கவும், ஊர்வலம் செல்லவும் கூடாது என அரசியல் கட்சியினருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விதிமுறைகளை கடைபிடிப்பதில் அரசியல் கட்சி தலைவர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here