`மோடி பிறந்தநாளை தினமும் கொண்டாடுங்கள்!’- 2.5 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது குறித்து ப.சிதம்பரம் விமர்சனம்

0

“பிரதமர் மோடியின் பிறந்தநாளை தினமும் கொண்டாடுங்கள்” என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்திருக்கிறார்.

பிரதமர் மோடியின் 71வது பிறந்ததினத்தை யொட்டி சிறப்பு ஏற்பாடாக அதிக அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கில் அதற்கான ஏற்பாடுகளை கடந்த சில நாட்களாக ஒன்றிய அரசு செய்துவந்தது. அதன்படி, இந்தியா முழுவதும் பல்வேறு சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இரவு எட்டு மணிவரை நீடிக்கப்பட்ட தடுப்பூசி முகாம் நிறைவில் 2.5 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

இதற்கு முன் ஒரு கோடி தடுப்பூசி ஒரே நாளில் செலுத்தப்பட்டிருந்தாலும் 2.50 கோடி என்ற எண்ணிக்கையை இந்தியா எட்டியதில்லை. எனவே ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்து கொரோனா தடுப்பூசி செலுத்தியது. கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு மக்கள் ஆர்வமுடன் வருவதால் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் மும்முரமடைந்திருக்கிறது. இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளை தினமும் கொண்டாடுங்கள் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “பிரதமர் மோடியின் பிறந்தநாளான நேற்று ஒரேநாளில் இந்தியா முழுவதும் 2.5 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் கர்நாடகத்தில் மோடி பிறந்தநாளன்று தினசரி சராசரியைவிட அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. பிரதமர் மோடி பிறந்தநாளை தவிர மற்ற நாட்களில் செயல்படாத மாநிலங்களாகவே இவை இருந்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி அவரது பிறந்தநாளை தினமும் கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன்” என விமர்சித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here