ஞாயிறு முழு ஊரடங்கு நாளன்று போட்டி, நேர்முகத்தேர்வுக்கு செல்வோர் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்த நேரத்தில் மாநிலங்களுக்கு இடையேயான பொது, தனியார் பஸ் சேவைகள் அனுமதிக்கப்படும். ஆனால், பயணத்தின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 9ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் முழு முடக்கம் நடைமுறைப்படுத்தப்படும். இருப்பினும் அத்தியாவசிய பணிகளான மருத்துவ பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ஏ.டி.எம். மையங்கள், சரக்கு வாகனப்போக்குவரத்து மற்றும் பெட்ரோல் – டீசல் பங்குகள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படும் என்றும் பொதுப்போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் ஆகியவை இயங்காது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முழு ஊரடங்கு நாளான ஞாயிறுக்கிழமையன்று போட்டி, நேர்முகத்தேர்வுக்கு செல்வோர் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முழு ஊரடங்கு நாளான ஞாயிறுக்கிழமையன்று யு.பி.எஸ்.சி, டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள், நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கான நேர்முக தேர்வில் பற்கேற்க செல்வோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்க செல்வோர் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு அல்லது நிறுவனத்தின் அழைப்பு கடிதத்தை காண்பித்து பயணங்களை மேற்கொள்ளலாம். தேர்வு எழுத செல்வோருக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.