`முன்னாள் ஆளுநர் புரோகித்தை போல ஆய்வு செய்வீர்களா?’- அடக்கி வாசிக்கும் புதிய ஆளுநர் ரவி

0

“மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழ்நாட்டில் உள்ளதால் ஆளுநர் பதவிக்கான விதிகளுக்கு உள்பட்டு செயல்படுவேன்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், “உலகின் தொன்மையான நாகரீகத்தை சேர்ந்த மக்கள் வாழும் தமிழகத்தின் ஆளுநராக பதவி ஏற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னால் முடிந்த அளவிற்கு தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசின் முன்னேற்றத்திக்காக உழைக்க உள்ளேன்.

தமிழகத்தில் பணியாற்றுவது என்பது சவாலுக்கு அப்பாற்பட்டது. தமிழகத்திற்கு சேவையாற்றுவது தான் முதல் பணி. தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்றுவேன். தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. மேலும் பழம்பெரும் கலாசாரத்தை கொண்டது தமிழ்நாடு. அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவேன். பொறுப்பு மாறும் போது அதற்கு தகுந்தாற்போல் நாம் மாறிக்கொள்வது அவசியம்” என்றார்.

இதன் பின்னர் அவரிடம், முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் போல மாவட்டந்தோறும் ஆய்வு செய்வீர்களா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ஆளுநர் ரவி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழ்நாட்டில் உள்ளதால் ஆளுநர் பதவிக்கான விதிகளுக்கு உள்பட்டு செயல்படுவேன்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here