தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ.500 அபராதம் வசூலிக்க ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்றாலும் 25 முதல் 30க்கும் மேற்பட்ட நோய் பாதிப்புகள் குறிப்பிட்ட 8 மாவட்டங்களில் கண்டறியப்பட்டு வருகிறது.எனவே மற்ற மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை மனதில் கொண்டு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அண்மையில் கடிதம் எழுதி இருந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், ‘தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அக்கறையுடன் மக்கள் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்; தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நோய்த்தொற்று அறிகுறி இருந்தால் தவறாமல் மருத்துவமனை சென்று பரிசோதனை எடுத்து கொள்ளவேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா அதிகரிப்பதால் மக்கள் பதற்றம் அடைய தேவை இல்லை என ஒன்றிய அரசு கூறியுள்ளது.
கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து வருபவர்கள் சுய மருத்துவ கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.பள்ளி, கல்லூரிகளில் தேவைப்பட்டால் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை ஐஐடியில் கொரோனா பரிசோதனை உட்படுத்தப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். சென்னை ஐஐடியில் கொரோனா உறுதியான மாணவர்களின் உடல்நிலை சீராகவே உள்ளது.’ இவ்வாறு பேசினார்.