மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பத்மபிரியா, சந்தோஷ் பாபு ஐஏஎஸ் திடீர் விலகல்!

0

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, பத்மபிரியா விலகுவதாக அறிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபும், மதுரவாயல் தொகுதியில் பத்மபிரியாவும் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

இந்த நிலையில், கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த டாக்டர் மகேந்திரன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியதோடு, கமல்ஹாசன் மீது சரமாரி குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்திலிருந்து முக்கிய தலைவர்களில் ஒருவரான தலைமை அலுவலக பொதுச் செயலாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு விலகியுள்ளார். கட்சியின் செயல்திட்டங்கள், தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க பெரிதும் உறுதுணையாக இருந்த சந்தோஷ்பாபு பதவி விலகியுள்ளது மக்கள் நீதி மய்யம் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சந்தோஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில்” தனது விலகலுக்கு சொந்தக்காரணம் என்று தெரிவித்துள்ளார். கமலுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் பாபுவைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தில் வேட்பாளராக போட்டியிட்ட சமூக ஆர்வலர் பத்மபிரியாவும் விலகியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன். அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு, என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும். என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கும் நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்தமைக்கும் நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருவது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here