புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் ராஜினாமா கடிதத்தை அளித்த முதல்வர் நாராயணசாமி, “நியமன எம்.எல்.ஏக்கள் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு செய்த எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள்” என்று காட்டமாக கூறினார்.
புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் கூடியது. பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் நாராயணசாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியால் நாராயணசாமி உள்ளிட்டோர் பேரவையில் இருந்து வெளியேறினர்.

புதுச்சேரியில் அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில் ஆளுநர் மாளிகைக்கு நாராயணசாமி சென்றார். அங்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். ராஜினாமா கடித்தை அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, புதுச்சேரி அமைச்சரவையை ராஜினாமா செய்துள்ளோம். முடிவு செய்ய வேண்டியது ஆளுநர் தான். என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜகவுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள். நியமன எம்.எல்.ஏக்கள் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு செய்த எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள்” என்றார் காட்டமாக.
