மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகாவை புரட்டிப்போட்டது `டவ்தே’ புயல்!

0

மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களை `டவ்தே’ புயல் புரட்டி போட்டுள்ளது. புயலால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ‘டவ்தே’ புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி பகுதியையொட்டிய பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. கேரளா, கர்நாடகத்திலும் பலத்த மழை பெய்தது. இதற்கிடையே புயல் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது. இந்த புயல் மும்பை கடல் பகுதி வழியாக சென்று மே 18ம் தேதி (இன்று) குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டது. இந்த புயல் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்தது. புயலை எதிர்கொள்ள குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன. மேலும் பேரிடர் மீட்பு படையினர், முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

இந்தநிலையில் அதி தீவிரபுயல் நேற்று அதிகாலை மேலும் தீவிரமடைந்தது. புயல் வேகமாக நகர தொடங்கியது. இதன் காரணமாக ஒருநாள் முன்னதாகவே நேற்று இரவு 9 மணி அளவில் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை நெருங்கியது. முன்னதாக மும்பை கடல் பகுதியில் 145 கி.மீ. தொலைவில் புயல் நகர்ந்து சென்றது. இதன் காரணமாக மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதலே மழை பெய்ய தொடங்கியது. மும்பையில் நேற்று 120 கி.மீ. வேகம் வரை சூறை காற்று வீசியது. இடைவிடாத மழையும் கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக நாட்டின் நிதி தலைநகர் மும்பை நிலைகுலைந்து போனது.

பி.கே.சி.யில் அமைக்கப்பட்டு இருந்த கொரோனா மெகா தடுப்பூசி மையம் காற்றில் பறந்தது. சி.எஸ்.எம்.டி. ரயில் நிலைய பிளாஸ்டிக் கூரைகளும் தூக்கி வீசப்பட்டன. காட்கோபரில் மின்சார ரயில் மீது மரம் விழுந்தது. டோம்பிவிலியிலும் தண்டவாள உயரழுத்த மின்கம்பி மீது மரம் முறிந்து விழுந்தது. பல இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளநீரில் மூழ்கின. இதனால் அத்தியாவசிய பணியாளர்களுக்காக இயக்கப்படும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. நாள் முழுவதும் மோனோ ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாந்திரா-ஒர்லி கடல் மேம்பாலம் மூடப்பட்டது. மேலும் மும்பை விமான நிலையமும் பல மணி நேரம் மூடப்பட்டது. எனவே மும்பை நகரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதபோல மும்பை அருகே உள்ள இதர கடலோர மாவட்டங்களிலும் சுழன்று அடித்த காற்றுடன், கனமழையும் கொட்டி தீர்த்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது. புயல் காரணமாக மகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் மாயமானர்கள். மேலும் பெண் ஒருவர் மரம் விழுந்தும், வாலிபர் ஒருவர் மின்கம்பம் சாய்ந்தும் பலியானார்கள். மராட்டியத்தில் மொத்தம் 6 பேர் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.

குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும்போது, மணிக்கு 155 முதல் 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என கணிக்கப்பட்டு இருந்தது. சூறை காற்று சுழன்று அடித்ததால் குஜராத்தை ‘டவ்தே’ புயல் சின்னாபின்னமாக்கியது. அங்கு கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்று, பேய் மழை காரணமாக பல இடங்கள் சேதம் அடைந்தது. ஏராளமான மின்கம்பங்களும், மரங்களும் சாய்ந்தன.

கோவா மாநிலத்திலும் புயலுக்கு பலத்த மழை பெய்தது. யூனியன் பிரதேசமான டாமன் டையூவும் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. ‘டவ்தே’ புயல் காரணமாக கர்நாடகத்தில் 121 கிராமங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. அந்த மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் 8 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகத்தில் புயலுக்கு 14 பேர் பலியாகி உள்ளனர். தற்போது பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here