2024, டிசம்பர் 28ம் தேதி புதுச்சேரியில் நடந்த பாமக புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் தந்தை, மகனுக்கு வெடித்த உரசல் இன்று வரை தீர்ந்தபாடில்லை. தனது பேரன் பரசுராமன் முகுந்தனை பாமக மாநில இளைஞரணி தலைவராக அறிவித்த ராமதாசுக்கு எதிராக மேடையிலேயே எதிர்ப்பை தெரிவித்தார் அன்புமணி. மேலும், பனையூரில் தனது அலுவலகம் இருக்கிறது, அனைவரும் வந்த என்னை சந்திக்கலாம் என்று கூறி தொலைபேசி எண்ணையும் அறிவித்தார் அன்புமணி. இதனால் கோபம் அடைந்த ராமதாஸ், நான் சொல்வதை கேட்காதவர்கள் கட்சியை விட்டு வெளியேறிவிடலாம் என்று அதிரடியாக கூறினார். இப்படி தந்தை, மகன் இடையே ஆரம்பித்த மோதல் இன்றும் தொடர்கிறது. இந்த மோதல் மேலும் முற்றும் வகையில் ஆகஸ்ட் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் அன்புமணி பொதுக் குழுவை கூட்டினார். அதில், கட்சியின் தலைவராக அன்புமணி ஓராண்டுக்கு நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே நேரத்தில் ராமதாஸை அவமானப்படுத்தும் வகையில், பொதுக்குழு மேடையிலேயே சேர் போட்டு, துண்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் ராமதாஸ் ஆதரவாளர்களை கொந்தளிக்க செய்தது. இந்தநிலையில், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார் ராமதாஸ். அதில், “பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த மே 30-ம் தேதி முதல் கட்சித் தலைவராக உள்ளார். செயல் தலைவராக அன்புமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், எந்த அங்கீகாரமும் இல்லாமல், எம்எல்ஏ மற்றும் கட்சியின் முன்னணித் தலைவர்களை பதவி மற்றும் கட்சியில் இருந்து நீக்குவதாக அன்புமணி அறிவித்து வருகிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட செயல் தலைவர் பதவியை ஏற்காமல், போட்டியாக செயல்படுகிறார். கட்சியின் விதிகளை மீறி செயல்படும் அவரை சஸ்பெண்ட் செய்வது அல்லது கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு மூலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுயலாபத்துக்காக செயல்படும் அன்புமணியின் நடவடிக்கைகளை கட்சி ஏற்கவில்லை. செயல் தலைவராக உள்ள அன்புமணி கூட்டிய பொதுக்குழுக் கூட்டம் சட்ட விரோதமானது. நிறுவனரின் ஒப்புதல் பெறாமலும், அவருக்கு அழைப்பு விடுக்காமலும், கட்சியின் விதிகளை மீறி பொதுக்குழுவை நடத்தி உள்ளார். பாமக தலைவர் பதவியில் மேலும் ஓராண்டுக்கு தொடர்வதாக அவராகவே அறிவித்துக் கொண்டுள்ளார். பாமக நிறுவனர் மற்றும் தலைவரான ராமதாஸின் அனுமதி இல்லாமல் எந்த கூட்டத்தையும் கூட்டுவதற்கு அன்பு மணிக்கு உரிமை மற்றும் அதிகாரம் இல்லை. அவர் சாதாரண செயல் தலைவர்தான்” என்று கூறப்பட்டிருந்தது.

இப்படி அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் செயல்பட்டு வந்தாலும், நான்தான் பாமக என்று கூறிவருகிறார் அன்புமணி. அண்மையில் ராமதாஸ் தன் 60வது திருமண நாளை கொண்டாடினார். அன்புமணி சென்று வாழ்த்தவில்லை. தாய் சரஸ்வதிக்கு மட்டும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததாக ராமதாஸ் தன் வருத்தத்தை தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில், ராமதாசின் மனைவி சரஸ்வதி ஆகஸ்ட் 15ம் தேதி தன் பிறந்த நாளை கொண்டாடினார். அதை முன்னிட்டு மனைவி சவுமியா, மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகளுடன் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்ற அன்புமணி, கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது, ராமதாசும் உடன் இருந்தார். கடந்த மே 11ம் தேதி மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கு பின் ராமதாசும், அன்புமணியும் ஒன்றாக சந்தித்துள்ளனர். இது பா.ம.க.வினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, ஆகஸ்ட் 16ம் தேதி தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “அன்புமணி தன்னிடம் ஆசீர்வாதம் வாங்கவில்லை. அது பொய். வணக்கம் என்றார். நானும் வணக்கம் என்றேன். அதைத் தவிர வேறெதுவும் பேசவில்லை. அன்புமணியுடன் சமாதானம் ஏற்பட்டதாகக் கூறுவது பொய்” என்று தடாலடியாக கூறினார்.
இந்தநிலையில், புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் உள்ள சங்கமித்ரா அரங்கில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமதாசின் மகள் காந்திமதி பங்கேற்றார். அன்புமணி உட்காரும் இடத்தில் காந்திமதி உட்கார்ந்திருந்தார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக பாமகவில் புதிய விதி 35 உருவாக்கம் செய்யப்பட்டு, அதன்மூலம் சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் தனியாகவோ, கூட்டணி அமைத்தோ போட்டியிடுவதற்கு தேவையான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் டாக்டர்.ராமதாசிற்கு மட்டுமே அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் டாக்டர் ராமதாசிற்கு மட்டுமே வழங்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இனி பாமக தலைவர் ராமதாஸ் தான் கூட்டணி குறித்த அனைத்து முடிவுகளையும் அவரே எடுப்பார் என்று பொதுக்குழுவில் ஜி.கே மணி கூறினார்.
மேலும் பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதில், மைக்கை தூக்கிப் போட்டு ராமதாஸ் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், பனையூர் அலுவலகத்துக்கு வரச்சொல்லி தொண்டர்களுக்கு கைப்பேசி எண் கொடுத்தது. தைலாபுரத்தில் நடந்த மா.செ. கூட்டத்தில், 100 மா.செ.க்களை வராமல் தடுத்தது. சமூக ஊடகங்களில் ராமதாஸ் பற்றி அவதூறான, அருவருக்கத்தக்க, இழிவுபடுத்தும் செய்திகளை வெளியிட்டது. சமரச பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ளாமல் உதாசீனப்படுத்தியது. ராமதாஸ் இருக்கைக்கு கீழ் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது. அனுமதி பெறாமல் பொதுக்குழு நடத்தி, அதில் ராமதாஸுக்கு தனி இருக்கையில் துண்டும் படமும் வைத்து, ‘ராமதாஸுக்கு நல்ல புத்தி கிடைக்க வேண்டும்’ என வேண்டியது. அனுமதியை மீறி ‘உரிமை மீட்க, தலைமை காக்க’ என்ற நடைபயணம் கபட நாடகம் நடத்தியது. ராமதாஸை சந்திக்க வருவோரிடம், பணமும் பதவியும் தருவதாக ஆசை வார்த்தை கூறி பனையூருக்கு கடத்திச் செல்வது. என் படம் போடக்கூடாது, பெயரை பயன்படுத்தக்கூடாது என ராமதாஸ் வலியுறுத்தப் பின்னரும், கூட்டங்களிலும் கட்சிக்காரர்களிடமும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி பேசிவருவது. மக்கள் தொலைக்காட்சியை அபகரித்தது. பசுமைத்தாயகம் அமைப்பை திட்டமிட்டு கைப்பற்றிக் கொண்டது. ராமதாஸ் அனுமதி பெறாமல் பொதுக்குழு கூட்டியதுடன், அதில் அவருக்கு இருக்கை வைத்து துண்டு அணிவித்தது. பாமக தலைமை அலுவலகத்தை, ராமதாஸுக்கு தெரியாமலேயே மாற்றியது. ராமதாஸ் நீக்கியவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்ததும், அவர் சேர்த்தவர்களை நீக்கியது செல்லாது. ராமதாஸிடம் எதுவுமே பேசாமல், 40 முறை பேசியதாக பொதுவெளியில் சொன்னது. ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் இருந்தபோது, கூட்டுப் பிரார்த்தனை செய்வதாக கேலி கிண்டல் செய்தது என கூறப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டை ஒருமனதாக ஏற்க ஒழுங்கு நடவடிக்கைக் குழு கோரிக்கை வைத்தது.
இதைத் தொடர்ந்து பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்க அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியை ராமதாஸ் முடிவு செய்வார். அதற்கு விருப்பம் தெரிவித்தால் அதற்கடுத்து வரும் கூட்டணிகளை அன்புமணி முடிவு செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும் நிலை இருக்கிறது. நீங்கள் என்னை அடக்க முடியாது. என் வழி தனி வழி என்று சென்று கொண்டிருக்கும் அன்புமணிக்கு ராமதாஸ் கடிவாளம் போடுவாரா? அல்லது களமிறக்கி மகள் காந்திமதியை வைத்து பதிலடி கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!