புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FERA) சார்பில் காத்திருப்பு போராட்டம் மாநில செயலாளர் உதயசூரியன் தலைமையில் கணகவேல் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த காத்திருப்பு போராட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களை முடிவு செய்திட போதிய கால அவகாசம் அளித்திட வேண்டும். ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடிகள் ஏற்படுத்துவதை கைவிட வேண்டும். இத்திட்டத்தின் முகாம்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த கூடுதல் பணியிடங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் ‘சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டத்தை’ தமிழக அரசு உடன் இயற்ற வேண்டும்.

பொது மக்களுக்கான பணியை மேலும் சிறப்பாக மேற்கொள்ள வருவாய் & பேரிடர் மேலாண்மைத்துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும், காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும்.
வருவாய்த்துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அதீதமான பணி நெருக்கடி ஏற்படுத்துவது தொடர்பாகவும், குறிப்பாக களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்பந்தம் செய்வதை உயர் அலுவலர்கள் முற்றாக கைவிட வேண்டும். வருவாய்த்துறையின் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிப்பளுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் உடன் வழங்கிட வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
அரசுப் பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்தின் வறிய சூழல் மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5% என குறைக்கப்பட்டுள்ளதை இரத்து செய்து, ஏற்கனவே இருந்ததைப் போன்று 25% ஆக நிர்ணயம் செய்திட வேண்டும். பணியில் மரணமடையும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் உரிய பணியிடம் வழங்கிட வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் நில அளவைத் துறையின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலைகளிலும், வெளிமுகமை, ஒப்பந்த, தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணி நியமனங்களை முழுமையாக கைவிட வேண்டும். அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தியாளர் பழனிவேல்…