`பாலச்சந்தர், பாரதிராஜாவை ஒன்றாக இயக்கியவர்!’- கொரோனாவால் இயக்குநர் தாமிரா மரணம்

0

இரட்டைச்சுழி படத்தில் இயக்குநர்கள் பாலச்சந்தர், பாரதிராஜா இருவரையும் ஒன்றாக இயக்கிய இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றின் காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.

இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் மட்டும் நாடு முழுவதும் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,73,13,163 ஆக உள்ளது.

தமிழகத்தில் கொரொனா பாதிப்பின் எண்ணிக்கை நேற்றைய தினத்தில் 15 ஆயிரத்தைக் கடந்தது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றின் காரணமாக இன்று காலை உயிரிழந்தார். இவர் ஆண் தேவதை, ரெட்டசுழி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டு சில தினங்களாக அசோக் நகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று காலை மூச்சுத்திணறல் அதிகமாகி உயிரிழந்தார்.

இரட்டைச்சுழி படத்தில் இயக்குநர்கள் பாலச்சந்தர், பாரதிராஜா இருவரையும் ஒன்றாக இயக்கிய தாமிரா, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆண் தேவதை படத்தை இயக்கியிருந்தார். சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் நடித்திருந்த அந்தப் படத்திற்கு சரியான தியேட்டர் கிடைக்காமல் 3 முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் தள்ளிப்போனது. பின்னர் ஒருவழியாக வெளியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றது. கொரோனா தொற்றால் இயக்குநர் இறந்திருப்பது தமிழ் சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here