20 ஆண்டுகாலம் பின்தங்கி இருக்கும் தொகுதி.! பதவி காலம் முடியப்போகிறது மீண்டும் தங்களை தேடி சட்டமன்ற உறுப்பினர்கள் வேட்பாளராக வலம் வர கூடிய நிலையில் கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக என்ன செய்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளத்தான் இந்த என்ன செய்தார் எம்எல்ஏ பகுதியை உருவாக்கி பல சட்டமன்ற உறுப்பினர்களை பற்றி எழுதி வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியை பற்றியும் அதன் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் மக்களுக்கு என்ன வாக்குறுதிகளை அளித்தார்,அந்த மக்களுக்கு என்ன செய்து கொடுத்தார் என்பதை மக்கள் வாயிலாக தெரிந்து கொள்ளுங்கள்.
திருவாரூர் மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் நன்னிலம் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ-வாக இருக்கிறார். இவர் தனது சொந்த தொகுதியான மன்னார்குடியை விட்டு விட்டு நன்னிலத்தில் வந்து தொடர்ந்து வெற்றிப் பெற்று, மூன்றாவது முறையாக எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.

இந்த தொகுதியில் நன்னிலம், பேரளம், குடவாசல், வலங்கைமான் ஆகிய 4 பேரூராட்சிகளையும், நன்னிலம், குடவாசல், வலங்கைமான் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களையும் கொண்டது. 2,72,157 வாக்காளர்களை கொண்ட இந்த தொகுதி முழுவதும் கிராமபுறங்களையே உள்ளடக்கியது. இங்கு பட்டியலினத்தவர்களே பெரும்பான்மையினர். அதற்கு அடுத்தபடியாக வெள்ளார்களும், முக்குலத்தோரும் உள்ளனர். முஸ்லீம்கள், வன்னியர்கள், முத்தரையர்களும் கணிசமாக வாழ்கின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகள் காமராஜ் அமைச்சராக இருந்துள்ளார். அப்போதும் நன்னிலம் தொகுதிக்கு எதுவும் பெரிதாக செய்ததில்லை. இவர் கொண்டு வந்த நன்னிலம் மற்றும் குடவாசல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் , நன்னிலம் கல்லூரியின் அடிப்படை வசதிகள் கூட மேம்படுத்தப்படவில்லை என்கிறார்கள் தொகுதி மக்கள். குடவாசல் கல்லூரி வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்துள்ளது. அதையும் திமுக ஆட்சி வந்ததும், குடவாசலுக்கு அருகே உள்ள, திருவாரூர் தொகுதியைச் சேர்ந்த செல்லூருக்கு கொண்டுச் சென்று விட்டார்கள். தற்போது தான் எதிர்கட்சி உறுப்பினராக இருப்பதால் எதுவும் செய்ய முடியவில்லை, திமுக என்னை எதுவும் செய்யவிடவில்லை என்று சொல்லி வருகிறார். அமைச்சர் காமராஜ்.
அதேபோல தொகுதியின் பல இடங்களில் சாலை வசதிகள் கூட உருப்படியாக கிடையாது. தெரு விளக்குகள் கூட சில இடங்களில் சரியாக எரிவது கிடையாது. இவர் உணவுத்துறை அமைச்சராக இருந்தும் இன்றும் பல இடங்களில் நெல்மணிகள் வெட்ட வெளியில் மழையில் காய்ந்து முளைத்து வருகிறது. இவர் நினைத்திருந்தால் உணவுத் துறை அமைச்சராக இருக்கும் போது நன்னிலம் தொகுதியை சின்ன சிங்கப்பூராகவே மாற்றி இருக்க முடியும் அந்த அளவுக்கு இவரிடம் பணம் புழங்கியது ஆனால் அதனைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய எதிர்காலத்தையும் எதிர்காலத்தில் எப்படி பணம் வரவேண்டும் அதற்கு எப்படி முதலீடு செய்யலாம், ஹாஸ்பிடல் கட்டலாமா, கல்லூரிகள் கட்டலாமா என்பதை மட்டுமே சிந்தித்து செயல்பட்டார்.
அதிமுக ஆட்சியில் காமராஜ் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்தபோது, பெது விநியோகத்திற்காக உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தி கொள்முதல் செய்த மோசடியில், ரூ.350 கோடி ஊழல் நடந்துள்ளதாக காமராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக சென்னை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் காமராஜுக்கு வேண்டப்பட்ட இடங்கள் மற்றும் அவருடைய பினாமி ஒன்றியச் செயலாளர் சி.பி.ஜி.அன்பு வீடு ஆகிய இடங்களில் அமுலாக்கத்துறை ரைடு நடந்தது. இந்த வழக்கில் காமராஜ், அவர் மகன்கள் இனியன் மற்றும் இன்பன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பின்னால், இவர் மகன்களுக்கு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே ஸ்ரீ காமாட்சி மல்டி ஸ்பெஷாலிட்டி என்ற பெயரில் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு மருத்துவமனை கட்டிக் கொடுத்துள்ளார்.
காமராஜ் பணபலத்தை நம்பி, மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிட தயாராகி வருகிறார். அதற்காக 6 மாதங்களுக்கு முன்பே, அதிமுக பூத் கமிட்டிக் கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டுள்ளார். பூத் கமிட்டி கூட்டத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்திக் கூட்டவில்லை என்பதற்காக கடிந்து கொண்டு கட்சிக்காரர்களை பூத் கமிட்டிக்கு செலவு செய்ய சொல்லி நெருக்கடி கொடுத்து வருகிறார்.. அதுபோல கட்சிக்காரர்களின் வீட்டு விஷேசங்களுக்கும் துக்க நிகழ்ச்சிக்கும் நிகழ்ச்சி நடக்கும் அன்றே வருவதில்லை. அவருக்கு வசதியான ஒரு நாளில் தொகுதி முழுவதும் எல்லா வீட்டிற்கும் சேர்த்து போய்விட்டு வந்து விடுவார் என்ற குறையும் உள்ளது. தொகுதி மக்கள் இவரை அணுக முடியாமல் மிகவும் திணறி வருகின்றனர் காரணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எந்த நேரமும் பூட்டியே இருக்கிறது அங்கு சென்றால் மக்களை வரவேற்று குறைகளை கேட்க ஒருவர் கூட அந்த அலுவலகத்தில் இல்லை என்பதும் பெரிய குறையாக தெரிவிக்கின்றனர் பகுதி மக்கள்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆர்.காமராஜை எதிர்த்து திமுக சார்பில் ஜோதிராமன் போட்டியிட்டார். கடும் போட்டிக்கிடையே 4,424 வாக்குகள் வித்தியாசத்தில் காமராஜ் வெற்றிப் பெற்றார். திமுக மாவட்டச் செயலாலர் பூண்டி கலைவாணன் ஜாதி பாசத்தால் சைடு அடித்ததால்தான் காமராஜ் வெற்றி பெற்றார் என்றும் திமுகவில் அதிருப்தி நிலவுகிறது. ஆனால், இந்த முறை உதயநிதி ஸ்டாலின் திருவாரூரில் போட்டியிட்டால் பூண்டி கலைவாணனையே நன்னிலம் தொகுதியில் காமராஜ்க்கு எதிராக நிறுத்த திமுக தலைமை யோசித்து வருவதாகவும் தெரிகிறது. அப்படி நடந்தால் காமராஜின் கதி அதோகதி! இல்லை என்றாலும் காமராஜின் வெற்றி அவ்வளவு ஈசியில்லை!
தொகுதியில் மக்களிடையே முன்னாள் அமைச்சர் காமராஜுற்கு நல்ல பெயர் இல்லை என்பதே நாங்கள் தொகுதியை வலம் வந்த வகையில் தெரிய வருகிறது.
ஆக மொத்தம் அவர் தொகுதி இன்னும் 20 ஆண்டுகாலம் பின்தங்கி தான் இருக்கிறது. மக்களின் கணிப்பு படி அவர் சட்டமன்ற உறுப்பினராக அவருடைய பணியில் அவர் பெயில் தான்.
பெயர் – ஆர்.காமராஜ்
தொகுதி. நன்னிலம்
தொழில். அரசியல் மற்றும் பல இடங்களில் பிஸ்னஸ்.
சாதனை. சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றும் கிடையாது.
கமிஷன். அதற்கு அளவே கிடையாது.
கரப்ஷன்- தொகுதி மக்களிடையே நிறைய உள்ளது
எதிரிகள்- முன்னாள் அமைச்சர் ஒருவர்.
பினாமி.சி.பி.ஜி.அன்பு.
பலம்- ஜாதி, பணம்.
பலவீனம்- அப்படி ஒன்றும் கிடையாது.
மதிப்பீடு – ஃபெயில்.
