நடிகர் ஆர்யா வழக்கில் திடீர் திருப்பம்!- வெளிநாட்டு பெண்ணிடம் மோசடி செய்த 2 பேர் சிக்கினர்

0

நடிகர் ஆர்யா போல் நடித்து வெளிநாட்டு இளம் பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த சென்னை வாலிபர்களை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்துள்ளனர்.

ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண் ஒருவர் நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னிடமிருந்து 70 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று பின் திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாகவும் கூறி அவர் மீது நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டுத் தரும்படி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக நடிகர் ஆர்யாவிடமும் போலீசார் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரின் தொடர் விசாரணையில் நடிகர் ஆர்யாவிற்கும் இந்த வழக்கிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது உறுதியானது. மேலும், விசாரணையில் சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான் சமூக வலைத்தளத்தில் நடிகர் ஆர்யாவாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஜெர்மனி வாழ் இலங்கைத் தமிழ் பெண்ணிடம் பேசிவந்ததும், நடிகர் ஆர்யாவின் பெயரில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 70 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்ததும் தெரியவந்தது.

மேலும், இந்த குற்றச் செயலுக்கு முகமது அர்மானின் மைத்துனர் முகமது ஹுசைனி பையாக் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரின் தனிப்படையினர், குற்றவாளிகள் இருவரையும் ராணிப்பேட்டை மாவட்டம் பெரும்புலிப்பாக்கத்தில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், ஒரு லேப்டாப், ஒரு ஐபேட் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைக்கவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here