புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி வேண்டி மனு அளித்தனர். இதே போன்று ரெகுநாதபுரம் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி கட்டடம் சேதம் குறித்தும் புதிய கட்டடம் அமைத்து தருமாறு மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் விரைவில் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார். அதன் பின்பு கறம்பக்குடி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். அப்போது படிப்பின் அவசியம் குறித்து மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், கறம்பக்குடி வட்டாட்சியர் இராமசாமி மற்றும் பல அரசு அதிகாரிகள் கட்சி பிரமுகர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி : பழனி வேல்