தனி நபரின் விவரங்கள், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்கள் முகநூலுக்கு பகிரப்படாது என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
பேஸ்புக்கிற்கு சொந்தமான பரிமாற்ற செயலியான “வாட்ஸ் ஆப்” பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் “வாட்ஸ் ஆப்” அதனுடைய பிரைவசி கொள்கைகளையும், பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைப்பதாக அறிவித்தது. ஒருமுறை மட்டும் இப்படி தனியுரிமை கொள்கைகள் மாற்றப்படுகிறது என்று பயனாளர்களுக்கு தகவல் வந்தது.
மேலும் பிரைவசி பாலிசி அப்டேட் செய்யவில்லை என்றால் அடுத்த மாதம் முதல் வாட்ஸ் ஆப்-ஐ பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் வாட்ஸ் ஆப் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள வாட்ஸ் ஆப் நிறுவனம், “நண்பர்கள், குடும்பத்தினர் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது. வாட்ஸ்அப் குரூப்புகள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும்.
பயனாளர்கள் தகவல்களை நீக்கவோ, டவுன்லோடு செய்து கொள்ளவோ முடியும். பயனாளர்களின் தனிப்பட்ட மெசேஜ், அழைப்பு விவரத்தை சேமித்து வைக்க மாட்டோம். வாட்ஸ்அப் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருவதால் விளக்கமளிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.