டெல்லி சென்றார் முதல்வர் ஸ்டாலின்!- பிரதமர் மோடியுடன் இன்று மாலை சந்திப்பு

0

டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அவருடன் தமிழக அதிகாரிகள் உடன் சென்றுள்ளனர்.

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து தமிழகத்தின் முதல் அமைச்சராக கடந்த மாதம் 7ம் தேதி மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகம் இருந்ததால், ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் தேவை பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதங்கள் எழுதி வந்தார். செங்கல்பட்டில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி மையத்தை விரைவில் தொடங்குவது குறித்தும் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது மத்திய அரசு தொடர்புடைய ‘நீட்’ தேர்வு பிரச்சினை, ஹைட்ரோ கார்பன், 7 பேர் விடுதலை ஆகியவை தலைதூக்குகின்றன. மேலும், தற்போது தமிழகத்தில் செலவீனம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜி.எஸ்.டி. பாக்கித்தொகை தேவைப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று காலை 7.30 மணியளவில் தனி விமானத்தின் மூலம் முக ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் துரைமுருகன், திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி, டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன் ஆகியோர் வரவேற்கின்றனர். 2 நாள் பயணத்தின் போது இன்று மாலை 5 மணி அளவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அவர் கொடுக்கிறார். இந்த பயணத்தின் போது முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் முதல்வரின் தனிச்செயலாளர் உமாநாத் ஐஏஎஸ், முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர்.

இந்த பயணத்தின் போது ஜிஎஸ்டி பாக்கித்தொகை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here