செங்கிப்பட்டி அடுத்து முத்தாண்டிப்பட்டி பிரிவு சாலையில் தனியாக நின்று கொண்டிருந்த காரில் மூட்டை மூட்டையாக போதைப்பொருள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில் காரில் போதைப்பொருட்கள் கடத்தி வருவதாக இரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் அடிப்படையில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் உத்தரவின்படி செங்கிப்பட்டி ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர் ரெத்தினசாமி மற்றும் காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் . அப்போது முத்தாண்டிப்பட்டி பிரிவு சாலையில் ஒரே இடத்தில் நீண்ட நேரமாக கார் ஒன்று தனியாக நின்று கொண்டிருந்ததை பார்த்த காவல் துறையினர் காரின் அருகே சென்றனர்.

காரில் இருந்த 2நபர்கள் காவல் துறையினர் காரை நோக்கி வருவதை கண்டு காரில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர்.பின்னர் காரை திறந்து பார்க்கும் போது உள்ளே மூட்டை மூட்டையாக போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.கார் மற்றும் போதைப்பொருட்களை பறிமுதல் செய்து செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். முதல் காட்ட விசாரணையில் காரில் கடத்தி வரப்பட்ட குட்கா 170 கிலோ என்றும் இந்த காரின் உரிமையாளர் தர்மபுரி மாவட்டம் அங்கனம்பட்டி கிராமத்தை சேர்ந்த மூர்த்தி s/o மொட்டையன் என்பது தெரியவந்தது.


பின்னர் 170 கிலோ குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்த செங்கிப்பட்டி காவல்துறையினர் தப்பி ஓடி இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்..