நடிகர் சூர்யாவை உதைத்தால் ரூ.1 லட்சம் பரிசு தருவோம் என மிரட்டல் விடுத்த மயிலாடுதுறை மாவட்ட பா.ம.க. செயலாளர் பழனிச்சாமி மீது 5 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நடிகர் சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகியது. இத்திரைப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், சமூகத்தின் விளிம்பில் இருக்கும் இருளர் இன மக்களின் இன்னல்களை வெளிச்சம் போட்டு காட்டியதற்காக பெரும்பான்மையானோர் நடிகர் சூர்யாவுக்கும் படக்குழுவினருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம் சூர்யாவின் ஜெய் பீம் படத்துக்கு சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சூர்யா மீது நடவடிக்கை எடுக்ககோரியும் காவல் துறையில் புகாரும் அளித்துள்ளனர். குறிப்பாக பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி சூர்யாவை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து பாமகவினர் தொடர்ந்து மிரட்டல் விடுத்த வண்ணம் உள்ளனர். வன்னியர் சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஜெய்பீம் விவகாராத்தில் நடிகர் சூர்யாவிடம் வன்னியர் சங்கம் ரூ.5 கோடி நட்ட ஈடு கேட்டது. நடிகர் சூர்யாவை உதைத்தால் ரூ.1 லட்சம் பரிசு தருவோம் என மயிலாடுதுறை மாவட்ட பா.ம.க. செயலாளர் பழனிச்சாமி அறிவித்தது சர்ச்சையானது .அதேநேரத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக திரை உலக பிரபலங்கள் அடுத்தடுத்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் நெட்டிசன்கள் சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர். குறிப்பாக விஜய், அஜித் ரசிகர்கள் அனைவரும் சூர்யாவுடன் துணை நிற்போம் என #WeStandWithSuriya ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்தனர்.
ஜெய் பீம் படத்துக்கு வன்னியர் சங்கம், பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தி.நகரில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, தற்போது அடுத்தக்கட்ட நடவடிக்கையாக சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்த பாமக பழனிச்சாமி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.