உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட ரஷியா மற்றும் பெலாரஸ் அணிகளுக்கு சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு இடைக்கால தடை விதித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பை அடுத்து, ரஷியா மற்றும் அதன் ஆதரவு நாடான பெலாரஸ் ஆகிய நாடுகளின் விளையாட்டு அணிகள் சர்வதேச அளவில் நடைபெறும் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று, விளையாட்டு அமைப்புகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரை செய்தது.
இந்நிலையில், சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு ரஷிய மற்றும் பெலாரஸ் அணிகள் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் உறுப்பினர் மற்றும் சர்வதேச போட்டியில் பங்கேற்பதில் இருந்து தற்காலிகமாக தடை செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
உக்ரைனில் இந்த ஏப்ரலில் நடைபெறவிருந்த உலக டென்னிஸ் சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்துள்ளது மற்றும் ரஷியாவில் நடைபெறும் அனைத்து சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் நிகழ்வுகளையும் காலவரையின்றி ரத்து செய்துள்ளது.
சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு உக்ரைனுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதால், உக்ரைன் மக்களுடன் இந்த கடினமான காலத்தில் துணை நிற்பதாக கூறியுள்ளது. மேலும் ரஷிய மற்றும் பெலாரஷ் டென்னிஸ் வீரர்கள் தனிநபர்களாக போட்டியில் பங்கேற்கலாம் என கூறப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.