கோபி அருகே துப்பாக்கியால் சுட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள செங்கோட்டையன் காலனியை சேர்ந்தவர் கண்ணன் (56). சுமை தூக்கும் தொழிலாளியான இவரது மனைவி பூவாள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு மூர்த்தி, விஜய், சுந்தரம் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். மனைவி இறந்துவிட்டதால் கண்ணன் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக, தொழிலாளி கண்ணன் தனக்கு தானே பேசிக்கொண்டு இருந்து வந்தார். இதனால், நேற்று முன்தினம் இரவு கண்ணனை மகன்கள் மூர்த்தியும், விஜய்யும் சேர்ந்து மொபட்டில் கோபியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது, நாகர்பாளையம் சாலையில் சென்ற போது மொபட்டில் பெட்ரோல் தீர்ந்து போனதால், தந்தை கண்ணனையும், மூர்த்தியையும் அங்கேயே இறக்கி விட்டு விட்டு பெட்ரோல் வாங்குவதற்காக விஜய் சென்றுவிட்டார். பெட்ரோல் வாங்கிக்கொண்டு திரும்பி வந்த போது தந்தை கண்ணனும், அண்ணன் மூர்த்தியும் மாயமாகி இருந்தனர்.
விளம்பரம:
இதையடுத்து, செல்போனில் தொடர்பு கொண்டு அண்ணன் மூர்த்தியிடம் கேட்ட போது, தந்தை கண்ணன், இருட்டில் அருகில் உள்ள தோட்டத்திற்குள் ஓடியதாகவும், தேடி பார்த்த போது கிடைக்கவில்லை என்றும் இதனால், தான் வீட்டிற்கு வந்துவிட்டதாகவும் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து, மகன்கள் இருவரும் சேர்ந்து தோட்டத்திற்குள் சென்று தேடிக்கொண்டிருந்தனர். அப்போது, தோட்டத்தின் உரிமையாளரான நாகர்பாளையம் கீரிப்பள்ளம் தோட்டத்தை சேர்ந்த விவசாயி மோகன்லால் (55) என்பவர் கையில் துப்பாக்கியுடன் வந்து கண்ணனை திருட வந்தாயா எனக்கேட்டதோடு, ஓடினால் சுட்டு விடுவேன் என கூறிக்கொண்டே, துப்பாக்கியால் சுட்டார். இதில், கண்ணன் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை நேரில் பார்த்த மகன்கள் இருவரும் மோகன்லால், தங்களையும் சுட்டுவிடுவார் என்று பயந்து அங்கிருந்து தப்பி ஊருக்குள் சென்று உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் உறவினர்களுடன் வந்து பார்த்த போது, கையில் அரிவாள் பிடித்தபடி கண்ணன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து கோபி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற கோபி போலீசார் கண்ணனின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோபி தாசில்தார் சரவணக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து, மகன் விஜய் கொடுத்த புகாரின் பேரில் விவசாயி மோகன்லால் மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று மோகன்லாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர். துப்பாக்கியால் சுட்டு தொழிலாளி பலியான சம்பவம் கோபி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது