`கொரோனாவுக்கு எதிரான போரை ஒன்றாக போராடுவோம்!’- தடுப்பூசி போட்டுக் கொண்டார் ரஜினி

0

அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த வருட இறுதியில் ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இருப்பினும் குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது, ரஜினிக்கு வேறு வகையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் கடந்த மாதம் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கியது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதம் 8ம் தேதி தனி விமானத்தில் சென்னையிலிருந்து ஹைதரபாத்துக்குச் சென்றார் ரஜினி. கடந்த 10ம் தேதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் நேற்று ஹைதராபாத்தில் இருந்து, தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.

இதனிடையே, ரஜினிகாந்த் இன்று தனது வீட்டில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியான கோவி ஷீல்டை போட்டுக் கொண்டுள்ளார். அவர் ஊசி போட்டுக் கொண்ட படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்த ரஜினியின் இளையமகள் செளந்தர்யா, ”நமது தலைவர் தடுப்பூசி போட்டுக் கொண்டார். கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த போரை ஒன்றாக எதிர்த்துப் போராடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here