கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் 10 குழந்தைகள் உட்பட 41 அப்பாவி பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்த மக்களின் குடும்பத்துக்கு முக்குலத்துப்புலிகள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த துயர சம்பவத்துக்கு காரணமான காவல்துறையின் மெத்தனப் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். வேலுச்சாமிபுரம் என்னும் குறுகிய இடத்தை ஒதுக்கி போதிய அளவில் போலிசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தாமல் குறைந்த எண்ணிக்கையில் மட்டும் காவல்துறையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியது, கூட்டத்தின் நடுவில் மூன்று முறை மின்சார நிறுத்தம் செய்யப்பட்டது போன்ற நிகழ்வுகளுக்கு காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் தான் பொறுப்பு. கூட்டத்தின் நடுவில் தொடர்ச்சியாக 10 ஆம்புலன்ஸ்கள் நுழைவு, அதனை தொடர்ந்து போலீஸ் தடியடி, இதனை தொடர்ந்து மின்சார துண்டிப்பு என அடுத்தடுத்த கொடூர சம்பவங்களால் மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கியது என அனைத்தும் சந்தேகத்தை கிளப்புகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இந்த சம்பவங்கள் நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை முழுமையாக சி.பி.ஐ யிடம் ஒப்படைத்து விசாரிக்க வேண்டும். அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் என்பது ஏமாற்று வேலை. ஆளுங்கட்சி நடத்துக்கும் பொதுக்கூட்டத்துக்கு மட்டும் எப்படி கேட்ட இடத்தில் அனுமதி, மாவட்டத்தின் மொத்த போலீஸ் படையும் பாதுகாப்புக்கு அணிவகுத்து நிற்கிறது? சட்டம் ஒழுங்கில் தமிழக அரசின் கையாலாகாத தனம் சந்தி சிரிக்கிறது. பிரச்சார பொதுக்கூட்டதை நடத்தும் த.வெ.க நிர்வாகிகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பதில் கோட்டை விட்டுள்ளனர். அவர்களும் இந்த கொடூர செயலுக்கு பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும். இனிமேலாவது அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி அனைத்து கட்சி கூட்டங்களுக்கு மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.