கருப்பின இளைஞர் கொலை!- அமெரிக்க போலீஸ் அதிகாரி குற்றவாளி என தீர்ப்பு

0

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாயிட் கொல்லப்பட்ட வழக்கில் போலீஸ்காரர் டெரிக் சாவின் குற்றவாளி என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற இளைஞரை கடந்த ஆண்டு டெரிக் உள்ளிட்ட சில காவல்துறையினர் கழுத்தில் காலை வைத்து அழுத்தியதில் அவர் உயிரிழந்தார். இந்த நிகழ்வு உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கு மின்னாபொலிஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனை விசாரிக்கும் 12 நீதிபதிகள் அடங்கிய குழுவினர், பிளாயிட் கொல்லப்பட்டது அமெரிக்க வரலாற்றில் கொடூரமான நிகழ்வு என்று குறிப்பிட்டனர். பின்னர் 45 சாட்சியங்களிடம் வாங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பிளாயிட் வழக்கில் டெரிக் சாவின் குற்றவாளி என்று அவர்கள் குறிப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து டெரிக்கின் ஜாமீனையும் நீதிபதிகள் ரத்து செய்தனர்.

இந்தத் தீர்ப்பு குறித்து ஜார்ஜின் இளைய சகோதரர் பிளோனிஸ் பிளாய்ட் கூறுகையில், “இன்று நாங்கள் அனைவரும் மீண்டும் சுவாசிக்கிறோம். ஜார்ஜூக்கான விடுதலை எங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் விடுதலை. இந்த வெற்றி மனிதநேயத்துக்குக் கிடைத்த வெற்றி. அநீதியை நீதி வென்றுள்ளது. ஒழுக்கமின்மையை ஒழுக்க நெறிகள் வென்றுள்ளது. என் சகோதரருக்கு நீதி கிடைக்க வேண்டும் என நினைத்தேன். அவர், வெறும் டி ஷர்ட்களில் இருக்கும் புகைப்படமாக இருந்துவிடக்கூடாது என நினைத்தேன். இன்று நாங்கள் மீண்டும் சுவாசிக்கிறோம்” என்று உருக்கமாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here