பண மோசடி வழக்கில் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதை தடுக்க அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது தமிழக காவல்துறை.
கடந்த அதிமுக ஆட்சியின் போது ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணி வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ராஜேந்திர பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை கடந்த 17ம் தேதியன்று தள்ளுபடி செய்து நீதிபதி எம்.நிர்மல்குமார் உத்தரவிட்டார். தொடர்ந்து, மனு தள்ளுபடி செய்யப்பட்ட தினம் முதல் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருப்பதாக விருதுநகர் காவல்துறை தகவல் தெரிவித்தது. இதையடுத்து, ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி வெளிமாநிலத்திற்கோ, வெளி நாட்டிற்கோ தப்பி செல்லாமல் இருப்பதை தடுக்க அவருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளது தமிழக காவல்துறை. இதனால் அவர் வெளிநாடு தப்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.