என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஒத்திவைப்பு!- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

0

நாளை நடைபெறவிருந்த என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

சென்னை, தமிழகம் முழுவதும் உள்ள 431 என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. அதன்படி, விருப்ப இடங்களை தேர்வு செய்வது, தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெறுவது, அதை உறுதி செய்ததும் இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுவது என்ற அடிப்படையில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மொத்தம் 2 ஆயிரத்து 430 பேர் இதில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த கலந்தாய்வு இன்று காலை 10 மணியுடன் நிறைவு பெற உள்ளது. இடங்களை உறுதி செய்தவர்களுக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணையும் வழங்கப்பட இருக்கிறது. இதனிடையே ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணையின்படி பொது பிரிவு மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு நாளை தொடங்க வேண்டும். ஆனால், நீட் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதமாகுவதால், பொது கலந்தாய்வு திட்டமிட்டபடி தொடங்குமா? என்ற குழப்பம் நீடித்து வந்தது. ஏனென்றால், என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடங்கள் வீணாகுவதை தடுக்கும் வகையில், ‘நீட்’ தேர்வு முடிவு வெளியான பிறகு என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு நடத்த என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்குழு முடிவு செய்திருந்தது. அதன்படி, கடந்த 21-ந்தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இப்போது நீட் தேர்வு முடிவு இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என்று தற்போது வெளியாகி இருக்கும் தகவலால், பொது கலந்தாய்வு திட்டமிட்டபடி தொடங்குமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் நாளை நடைபெறவிருந்த என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வு முடிவு வெளியாகி 2 நாட்களுக்கு பிறகு பொது கலந்தாய்வு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here