உடல்நலக்குறைவால் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்!

0

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழனின் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக திரைப்பட இயக்குநர் சீமான் இருந்துவருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீமான் இந்தக் கட்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்திவருகிறார். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல், 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி போட்டியிட்டுள்ளது. 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 6 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றது.

சீமானின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் அரணையூரில் அவரின் அப்பா செந்தமிழன் (80) வசித்துவந்தார். அவர், இன்று உயிரிழந்தார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ட்விட்டர் பதிவில், ‘முக்கிய அறிவிப்பு… நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை அப்பா செந்தமிழன் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

சீமானின் தந்தை மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஈபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். செந்தமிழன் அவர்களை இழந்துவாடும் சீமானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here