திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான களப்பணியாளர்கள் தங்களது 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட தலைவர் புவனேஸ்வரி தலைமையில் 6 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கொட்டும் மழையினை பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி அமர்ந்து தங்களது காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களது முக்கிய கோரிக்கைகளான…. பணியாளர்கள் ஆண்டு தோறும் பணி புதுப்பித்தல் முறையினை கைவிட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும், தமிழ்நாடு மாநில ஊரக / நகர் புற வாழ்வாதார இயக்கம் பணியாளர்கள் உதவி திட்ட அலுவலர், வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், சமுதாய அமைப்பாளர் மற்றும் மாவட்ட கணினி உதவியாளர் , மாவட்ட மேலாண்மை தகவல் அமைப்பு பகுப்பாய்வாளர் ஆகியோர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் உயர்வு மற்றும் பயணப்படி வழங்கிட வேண்டும்,

பணியாளர்களின் காப்பீட்டு திட்டமான பொது காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இணைப்பு செய்திட வேண்டும், பணியாளர்கள் ஊதிய தொகையினை மாவட்ட அளவில் மகளிர் திட்ட கோப்புகள் அலுவலகத்தின் மூலம் பணியாளர் வங்கி கணக்கிற்கு வழங்கிட வேண்டும், அனைத்து பணியாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்திடவும் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிட வேண்டும், அனைத்து பணியாளர்களுக்கும் ஈட்டிய விடுப்பு மற்றும் ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு வழங்கிட வேண்டும், பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு மற்றும் ஊதியத்துடன் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
பேட்டி
- நதியா , சமுதாய அமைப்பாளர்.
- லலிதா , வட்டார ஒருங்கிணைப்பாளர்.

