`உங்கள் ஆலோசனை தேவை!’- வாழ்த்து தெரிவித்த ஈபிஎஸ்ஸிடம் கோரிக்கை வைத்த ஸ்டாலின்

0

முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், “மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை! ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்!” என்று ட்வீட் செய்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்கிறேன். தேர்தலில் உழைத்த அனைவருக்கும் மனதார நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் & வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் கடும் போட்டியில், திறம்பட அயராது உழைத்து, வெற்றி அடைந்து இருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மதிப்பிற்குரிய மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து. தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள ஸ்டாலின், “அன்பு நண்பரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான
கமல்ஹாசன் அவர்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி!. பேரிடரிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பெரும் பணியில் தங்களைப் போன்றவர்களின் ஆதரவும் ஆலோசனைகளும் புதிய அரசு மேற்கொள்ளும் மக்கள் நலப் பணிக்குத் துணையாகட்டும்” என்று கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஒரு எடுத்தக்காட்டாய் திகழ, திமுக கூட்டணிக்கு என் வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here