`இவ்வளவு பெரிய பங்களா எதற்கு; நூறு ரூபாய் கூட இல்ல!’- துரைமுருகன் வீட்டில் எழுதி வைத்துச் சென்ற கொள்ளையன்

0

‘ஒரு நுாறு ரூபாய் கூட வைக்கலேன்னா, இவ்வளவு பெரிய பங்களா எதற்கு’ என, துரைமுருகன் சொகுசு பங்களாவில் திருட வந்தவர்கள், தங்கள் ஆதங்கத்தை நோட்டிலும், சுவற்றிலும் எழுதி சென்றுள்ளனர்.

தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகனுக்கு, திருப்பத்துார் மாவட்டம், ஏலகிரி மலை மஞ்சகொல்லையில், 25 ஏக்கரில், சொகுசு பங்களா உள்ளது. காவலாளி பிரேம்குமார், 45, வசிக்கிறார். கடந்த, 12ல் பங்களா கதவை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே புகுந்து, இரண்டு பீரோக்களை உடைத்துள்ளனர். எதுவும் சிக்காததால், ‘சிசிடிவி ஹார்டு டிஸ்க்’கை எடுத்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து, ஏலகிரிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், துரைமுருகனின் சொகுசு பங்களா சுவற்றில், ‘ஒரு, 100 ரூபாய் கூட வைக்க மாட்டாயா’ என, திருடர்கள் எழுதி வைத்துள்ளனர்.

அத்துடன், அங்குள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில், ‘ஒரு ரூபாய் கூட இல்ல; எடுக்கல’ எனவும், ‘100 ரூபாய் கூட வைக்கலேன்னா, இவ்வளவு பெரிய பங்களா எதற்கு’ எனவும், எழுதி வைத்து விட்டு சென்றது தெரிந்தது. மேலும், அவர்கள் ரம்மி விளையாடி, சீட்டு கட்டுகளை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். தனிப்படை போலீசார், துரைமுருகன் பங்களா அருகே உள்ள, மற்ற பங்களாக்களில் இருந்த, ‘சிசிடிவி’ கேமராக்களை ஆய்வு செய்ததில், சம்பவத்தன்று காரில், 10 பேர் வந்து சென்றது தெரிந்தது.

வாணியம்பாடியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் பங்களாவிலும், அதே நாளில் திருடர்கள் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று, அங்கும் எதுவும் இல்லாததால், அங்கிருந்த குறிப்பு புத்தகத்திலும், சுவற்றிலும் இதே மாதிரி எழுதிச் சென்றது தெரிந்தது.’கையெழுத்தை வைத்து, அவர்களை பிடித்து விடுவோம்’ என, போலீசார் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here