யூடியூப் சேனலில் ஆபாசமாகவும், கொச்சையாகவும் வீடியோ வெளியிட்டவரை பெண்கள் அடித்த உதைத்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் வசித்து வரும் விஜய் பி நாயர் என்பவர், `வி ட்ரிக்ஸ் சீன்’ என்ற யூ டியூப்சேனல் நடத்தி வருகிறார். இந்த யூடியூப் சேனலில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தும், கொச்சைப்படுத்தியும் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். இதனிடையே, திரைப்பட பின்னணி குரல் கொடுப்பவர்கள், மகளிர் அமைப்பினர் குறித்தும் ஆபாசமான கருத்துகளை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இதனால் கொந்தளித்த பின்னணி குரல் கலைஞரான பாக்கியலட்சுமி, மகளிர் அமைப்பை சேர்ந்த தியா சனா உள்ளிட்ட பலர் விஜய் பி.நாயர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அவர் மீது கருப்பு மை ஊற்றி அடித்து உதைத்துள்ளனர். பின்னர், ஆபாசமாக பதிவிட்ட வீடியோக்களை அழிக்க வைத்ததோடு, மன்னிப்பு கேட்க வைத்து அதனை யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், விஜய் நாயர் கொடுத்த புகாரின்பேரின் பாக்கியலட்சுமி உள்ளிட்ட 3 பெண்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேநேரத்தில் பெண்களை ஆபாசமாக பேசி பதிவிட்ட விஜய் பி நாயர் மீது ஜாமீனில் வரக்கூடிய பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே, பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள முதல்வர் பினராயி விஜயன், சமூக வலைதளங்களில் பெண்களை அவமதிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், புதிய சட்டம் கொண்டுவர ஆலோசிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
