ஆங் சான் சூகி சிறைபிடிப்பு… மியான்மரில் அவசர நிலை… ராணுவம் திடீர் அறிவிப்பு

0

மியான்மர் அரசு ஆலோசர் ஆங் சான் சூகி, அதிபர் உள்ளிட்டோரை ராணுவம் சிறைபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஓராண்டு அவசர நிலை அமல்படுத்தப்படுவதாக ராணுவம் திடீரென அறிவித்துள்ளது.

மியான்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்தது.

-Advertisements-

இந்தநிலையில், கடந்த சில வாரங்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இந்த சூழலில், மியான்மர் அரசு ஆலோசர் ஆங் சான் சூகி, அதிபர் உள்ளிட்டோரை ராணுவம் சிறைபிடித்தது. இதனால், அந்நாட்டில் மீண்டும் ராணுவ புரட்சி ஏற்படுமோ என்ற பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில், மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. மியான்மர் பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்ததால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டு உள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவித்துள்ளது. மியான்மரில் இன்று நாடாளுமன்றம் கூட இருந்த நிலையில், ராணுவத்தின் இந்த நடவடிக்கையால் அந்நாட்டில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மியான்மரில் நடைபெற்ற 2-வது பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆனால், ராணுவம் இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகவும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here