அம்மா உணவகம் சூறை… திமுகவினர் 2 பேர் நீக்கம், சிறையில் அடைப்பு!- மு.க.ஸ்டாலின் அதிரடி

0

சென்னையில் உள்ள அம்மா உணவகத்தை சூறையாடி பெயர் பலகையை சேதப்படுத்திய திமுகவினர் 2 பேரை கட்சியில் இருந்து நீக்கிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்த பெயர் பலகைகளை திமுகவை சேர்ந்த இருவர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான காட்சிகளில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இதனிடையே, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அம்மா உணவகம் சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டது கண்டனத்திற்குரியது. மழை வெள்ளம், கொரோனா கால ஊரடங்கின்போது அனைத்து மக்களுக்கும் உணவளித்த அம்மா உணவகத்தை சூறையாடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில், மதுரவாயல் பகுதியில் அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவை சேர்ந்த 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்து மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், உணவகத்தின் பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் பொருத்தவும், 2 பேர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் திமுக தலைவர் உடனடியாக உத்தரவிட்டார்” என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியன், “அம்மா உணவக பெயர் பலகையை அகற்றிய இருவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான இருவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட இருவரும் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. இருவர் மீதும் காவல்துறையிடம் புகார் மனு அளித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here