அமெரிக்க அதிபராக பதவியேற்றார் ஜோட பைடன்!- புறக்கணித்த ட்ரம்ப்

0

அமெரிக்க நாட்டின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவை டொனால்ட் டிரம்ப் புறக்கணித்தார்.

உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்பை வீழ்த்தி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். துணை அதிபராக ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவருமான பெண் தலைவர் கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

-Advertisements-

அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டடத்தின் மேற்கு பகுதியில் புதிய அதிபர், துணை அதிபர் பதவி ஏற்பு விழா, நேற்று அமெரிக்க நேரப்படி காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி நேற்றிரவு 9.30 மணி) கோலாகலமாக தொடங்கியது. பதவி ஏற்பு விழா, ஜோ பைடன் குடும்பத்தினருக்கு நெருக்கமான ஏசு சபை போதகர் லியோ ஜெரேமியா ஓ டொனோவன் பிரார்த்தனையுடன் தொடங்கியது.

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடனுக்கு, அந்த நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் நண்பகல் 12 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஜோ பைடன் 127 ஆண்டு கால பாரம்பர்யம் கொண்ட குடும்ப பைபிளை அவரது மனைவி ஜில் பைடன் கையில் பிடித்திருக்க, அதன் பேரில் பதவி ஏற்றுக்கொண்டார்.

அதே போன்று அமெரிக்காவின் 49-வது துணை அதிபராக கமலா ஹாரிசுக்கு, அந்த நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி சோனியா சோட்டாமேயர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கமலா ஹாரிஸ், தனது நெருங்கிய குடும்ப நண்பரான ரெஜினா ஷெல்டன் மற்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் ஆப்பிரிக்க வம்சாவளி நீதிபதி துர்கூட் மார்ஷல் ஆகியோருக்கு சொந்தமான 2 பைபிள்களின்பேரில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

விழாவில், முன்னாள் அதிபர்கள் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், அவர்களது மனைவிமார் மிச்செல்லி ஒபாமா, லாரா புஷ், ஹிலாரி கிளிண்டன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பதவி ஏற்பு விழாவில், விடைபெற்றுச்சென்ற அதிபர் டிரம்ப் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் அவர், “நாங்கள் எங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களுக்கு அதிர்ஷ்டம் வாய்க்கவேண்டும். இது முக்கியமான வார்த்தை” என கூறி வாழ்த்து தெரிவித்தார். அவர் அத்துடன் வாஷிங்டனில் இருந்து புளோரிடாவுக்கு புறப்பட்டு சென்றார். அதே நேரத்தில் விடைபெற்றுச்சென்ற துணை அதிபர் மைக் பென்ஸ், விழாவில் கலந்து கொண்டார். பொதுமக்களுக்கு பதிலாக அமெரிக்க தேசிய கொடிகள் இடம் பெற்றிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here