`அதிகார மாற்றத்தை ஏற்கிறேன்!’- பணிந்தார் டொனால்ட் டிரம்ப்

0

அமெரிக்காவில் வரும் ஜனவரி 20ம் தேதி முறையான அதிகார மாற்றம் நடைபெறும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வருகிற 20ம் தேதி அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அதில் முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக பைடன் பொறுப்பேற்க உள்ளார்.

-Advertisements-

ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதுபற்றிய வழக்குகளின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், ஜோ பைடன் வரும் 20ந்தேதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டது. சான்றிதழ் வழங்குவதற்கான ஒப்புதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் பணிகள் நாடாளுமன்றத்தில் நடந்தன.

இந்நிலையில், நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் முன் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக மாறியதை தொடர்ந்து, கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும் கலவரத்தில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கலவரம் தொடர்பாக 52 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், எலக்டோரல் காலேஜ் முடிவுகளின்படி, பைடனுக்கு ஆதரவாக 306 ஓட்டுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்புக்கு ஆதரவாக 232 ஓட்டுகளும் கிடைத்து உள்ளன. இதன் முடிவுகளுக்கு ஏற்ப பைடன் வெற்றியாளர் என நாடாளுமன்றம் முறைப்படி சான்றளித்து உள்ளது.

இதனை தொடர்ந்து வரும் 20ம் தேதி நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் ஜோ பைடன் அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்று கொள்கிறார். இதுவரை தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் இருந்து வந்த டிரம்ப், தற்போது அதிகார மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி வரும் 20ம் தேதி அமெரிக்காவில் முறையான அதிகார மாற்றம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here